போதையில் கார் ஓட்டி விபத்து.. சங்கம் சினிமாஸ் நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!

0 1719

கொரானா காலத்தில்  மதுபோதையில் காரை அதிவேகத்தில் இயக்கி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான சங்கம் திரையரங்கு குழும முன்னாள் துணை தலைவருக்கு 5 ஆண்டு 6 மாதங்கள் சிறை தண்டனையுடன், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் யமுனா இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை எதிரே உள்ள பர்ணபி சாலைக்குச் செல்ல முயன்ற போது ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் யமுனா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் அதி வேகமாக சென்ற கார், அருகில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக தப்ப முற்பட்டபோது, பொதுமக்கள் காரை மடக்கி பிடித்து, காரை ஓட்டி வந்த அப்துல் கவுஹீம் என்பவருக்கு தர்ம அடி கொடுத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அண்ணா சதுக்கம்
போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கவுஹீமிடம் விசாரித்தனர்.

விபத்து ஏற்படுத்திய அப்துல் கவுஹீம் சென்னையில் உள்ள சங்கம் சினிமா குழுமத்தின் துணை தலைவர் என்பதும் மது போதையில் தறிகெட்ட வேகத்தில் காரை இயக்கியதும் தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதிற்காக 5 ஆண்டு 6 மாதகள் சிறை தண்டனையோடு 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.

இதுவரை ஜாமீனில் இருந்த அப்துல் கவுஹீம் உடனடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவத்திற்கு பிறகு அப்துல் கவுஹீம் குழும துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டதாக சங்கம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

4 பெண் குழந்தை உள்ள நிலையில், ஆண் மாதிரியாக இருந்து குடும்பத்தை யமுனா காப்பாற்றி வந்ததாகவும், விபத்தை ஏற்படுத்தியவருக்கு தற்போது வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல எனவும் யமுனாவின் தாயார் உமாராணி தெரிவித்தார்.

போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் சட்டம் கடுமையான தண்டனையை தரும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments